Wednesday 16 July 2014

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு: 4 இந்திய வீரர்கள் காயம்

காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை முகாம் மீது இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு: 4 இந்திய வீரர்கள் காயம்உடனே இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் இந்திய தரப்பில் 4 ராணுவ வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. பாகிஸ்தானின் அத்துமீறலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நதியில் கார் கவிழ்ந்து விதி முடிந்த எட்டு பேர் பலி

காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் பாயும் செனாப் நதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்ததில் எட்டு பேர் பலியானார்கள்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது;- கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தச்சன் என்ற இடத்திற்கு அருகே செனாப் நிதியில் மேலுள்ள பாலத்தில் 13 பேருடன் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நதியில் சரிந்து விழுந்தது.

இதில் நதியில் மூழ்கி 8 பேர் பலியானார்கள். பலத்த காயத்துடன் இருவர் மீட்கப்பட்டனர். மேலும் மூவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.

விவசாயியாக பிறக்கக்கூடாது: தற்கொலை செய்த தந்தை மகனிடம் கடைசியாக பேசிய வார்த்தை


ஆந்திர மாநிலத்தில் வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகனிடம் கடைசியாக பேசும்போது விவசாயியாக மட்டும் பிறக்காதே என்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விவசாயி முன்று வாரங்களுக்கு முன் மேடக் மாவட்டத்தை சேர்ந்த ராயவரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனான வம்சியை பார்க்க சென்றுள்ளார். அவனை அருகிலுள்ள டீ கடைக்கு அழைத்து சென்ற அவர், அவனுக்கு டீயும் பன்னும் வாங்கிக்கொடுத்த பின் ஐந்து ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் நன்றாக படிக்கவேண்டும் என்று தனது மகனுக்கு அறிவுரை கூறிய அவர், ஒரு போதும் விவசாயியாக மட்டும் மாறிவிடாதே என்று கூறியதுடன் இனி யாரும் விவசாயியாக மட்டும் பிறக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

பின்னர் பள்ளிக்கு தனது மகனுடன் சென்ற அவர், அவனது வகுப்பு ஆசிரியரான கிருஷ்ணாவிடம் மகன் நன்றாக படிக்கிறானா என்று பார்த்துக்கொள்ளுமாறு கூறி மகனுக்கு குட் பை சொல்லிவிட்டு சென்றார். அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து தூக்கில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. விவசாயத்தால் நொடிந்து போய் தற்கொலை செய்து கொள்வதை இனியாவது தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.